அந்த படத்தில் அவர் பெரிய பண்ணையக்காரர். அவருக்கு ஒரு ப்ரண்ட். ஆனா அவரு சாதி அந்த பண்ணையக்காரர் சாதிக்கு கீழ தான். இங்கே சனாதன இந்து மதம் அப்டிதானே இருக்கு. என்னதான் ப்ரண்டா பழகினாலும் பண்ணையகாரருக்கு இவர் வேலைக்காரர் தான். நம்பிகையான நட்பான வேலைக்காரர். அது ஒன்னும் தப்பில்லை. இந்த சூழலில் ரெண்டு பேரும் ஒரு பங்ஷனுக்கு போறாங்க… அங்க அந்த பண்ணையக்காரர் அவர் பக்கத்தில அவரோட நண்பர உக்காந்து சாப்பிட சொல்ல… அங்க இருக்கிற எல்லாரும் அத எதிர்க்கிறாங்க, சாப்பிடமாட்டோம்னு எந்திரிச்சு நிக்கிறாங்க, ஏன்னா சாதி. உடனே பண்ணையக்காரரும்.. அவளோதானே டேய் எந்திரிடானு நண்பனை பார்த்து சொல்லவும், நண்பன் சொல்றானு அவனும் எந்திரிக்கிறான். எல்லாரும் சாப்பிட தொடங்கியதும், இந்த பண்ணையக்காரர் இலையை மூடிட்டு சாப்டாம போய்டுறார். நட்பு தான் பெருசுனு. இந்த படம் நல்லா ஓடுச்சு. இந்த சீன் பார்த்து சில்லறையை சிதறவிட்டவங்க உண்டு.
இப்ப இப்படி யோசிப்போம்.. ஒருவேளை அந்த பண்ணையக்காரர் ப்ரண்ட் நான் ஏண்டா இங்க உக்காந்து சாப்பிட கூடாதுனு ஊரை பார்த்து உரக்க கேட்டிருந்தா ?
ஒருவேளை அந்த பண்ணையக்காரர் ஏண்டா இவன் சாப்பிட்டா உங்களுக்கு என்னடா பிரச்சினை.. நீயும் வாய்ல தானே சாப்பிடுறேனு கேட்டிருந்தா ?
இது ரெண்டுமே அங்க நடக்கல. அதுனால அது நல்ல படம். ரெண்டு ஒன்னு நடந்திருந்தாலும் அது சாதி படம். இவ்ளோதான் இங்க இருக்கிற சாதி பட புரிதல்.
இன்னொரு படத்தில அது சுயசாதி உறவு முறை சிக்கல் பேசும் படம் தான். அதில ஊரே கிளம்பி சாமி கும்பிட போது. குலசாமி. ஊர்ப்பெரியவரை கூப்பிடும் போது அவர் சொல்லுவாரு . இதுக்குதானே போறிங்க.. அதான் எனக்கு இங்கயே கிடைச்சிருச்சே என்பார். அவர் கையில் சரக்கும் கறியும் வச்சிருப்பாரு. அதாவது தண்ணியடிச்சு கறி சாப்பிடதானேடா போறிங்க… இதுக்கு ஏண்டா நா அங்க வரனும் என்பார். உடனே எதிர் ஆள் என்னப்பா இப்படி சொல்றே… நம்ம சாதி சனமெல்லாம் ஒன்னுமண்ணா கூட வேண்டாமா என்பார். உடனே அந்த பெருசு… கோவிலுக்கு சனம் போன சரி. சாதி எதுக்கு போகுது என்பார். இந்த காட்சி எல்லாமே சுயசாதிக்கு உள்ளயே பேசிக்கொள்வார்கள். எடுத்தவரும் அதே சாதி தான் போல. ஒருவேளை அந்த பெருசு வேற சாதியாக இருந்து இந்த வசனத்தை பேசி இருந்தால்… இயக்குநர் வேறு சாதியாக இருந்தால்… போச்சு. அது சாதீப்படம்.
இது சாதி படம் இது சாதீ இல்லாத படம்னு இங்கே எதுவுமே இல்லை. ஒன்னு சுயசாதி படம். இல்லாட்டி ஒரு சாதி எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசுற படம். மூணாவது இது ரெண்டுலயும் வெளிப்படையா சிக்காம, கவனிங்க வெளிப்படையா சிக்காம கல்லா கட்ட மட்டுமே வரும் படம்.
பெரும்பாலான படங்கள் இங்கே ஒரு சாதி கட்டமைப்பில் தான் இருக்கும். பெண் பெருமை பேசிய படம் கூட இலைமறை காயாக சாதி இருக்கும். புதுமைப்பெண் படத்தில் ரேவதியை பார்ப்பன பெண்ணாக காட்ட வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் காட்டுவார்கள். ஏன் ? பெரும்பாலான விசு படங்கள், பாலசந்தர் ஷங்கர் படங்களில் எல்லாம் கதாபாத்திரங்கள் பெயர்களில் அவர்களின் சாதி தெரியும்படியாக பார்த்துக்கொள்வார்கள். இல்லையேல் வீட்டில் அவர்கள் சாமி கும்பிடும் இடத்தில் இவர்கள், அவர்கள் இல்லை என்பதை சொல்வதாக காட்சி அமைத்திருப்பார்கள். இந்தியன் படத்தில் லஞ்சம் கொடுக்க மறுக்கும் ஒருவரை கிரேசிமோகன் என்ற நாமம் போட்டவராகவும், லஞ்சம் வாங்கும் அதிகாரியை நல்ல கருப்பாக செந்திலை காட்டுவதிலும் கூட சாதி உண்டு. இது தவிர சில படங்களில் சாதியை சர்காஸ்டிக்காக சாடுவார்கள். கவுண்டமணி, சத்யராஜ் உள்ளிட்ட சில ஹீரோக்கள் சில படங்களில் அப்படியான வசனத்தை வைத்திருப்பார்கள். ஆனால் அதன் நோக்கம்... கைதட்டல். ஆனால் அதுவும் தேவைதான். கொஞ்சம் மட்டுப்படுத்தும். அல்லது கிண்டலாவது செய்யும்.
இங்க சுயசாதி படங்கள் அதிகம் வந்திருக்கிறது. தேவர்மகனும் அப்படித்தான். முத்துராமலிங்கமும் அப்படித்தான். ஆனால் இரண்டையும் ஒரே தட்டில் வைக்க முடியாது. கூடாது. இவை இரண்டும் சுயசாதி பெருமை பேசும் படங்கள். கர்ணனும், பரியேறும் பெருமாளும் பேசிய விசயங்கள் முக்கியமானவை. இது பேசியது சாதி வேற்றுமையால் விளையும் கொடூரங்களை. அசுரன் மெட்ராஸ் பேசியவை முக்கியமானவை. அதில் சில காலக்கோடுகள் தவறாக இருக்கலாம். இயக்குனரின் சில பார்வைகள் தவறாக இருக்கலாம். அதனை விமர்சிக்கவும் செய்யலாம். ஆனால் மறுதலிக்க முடியாது. கூடாது. மதயானைகூட்டம் சுயசாதி படம் தான். ஆனால் அது பேசியது சுயசாதி நரகல்களை. கூர்ந்து கவனியுங்கள். இவர்களை தவிர்த்துவிட்டால் நமக்கு யார் கிடைப்பார்கள். வடக்கே கவனியுக்கள் இராமயாணம், விஷ்ணு புராணம், அனுமார் என எடுக்க வந்துவிட்டார்கள். இல்லையேல் நாட்டை காப்பாற்ற போராடும் கதைகள் என இப்போது சிக்கிவிட்டது. இதனை நான் சொல்லவில்லை, அனுராக் சொல்கிறார். இந்தி சினிமா புது முயற்சிகளை விட்டு விலகி நீண்டகாலமாகி விட்டது என்கிறார்.
சினிமாவில் அரசியல் இல்லை, சாதியில்லை எவரேனும் சொன்னால் போடா முட்டாள் என சொல்லிவிடுங்கள். இருக்கிறது. அது எப்படி வெளிப்படுகிறது என்பது முக்கியம். அதனை வைத்து தான் நாம் உரையாட தொடங்க முடியும். முதலில் படம் பாருங்கள். இந்த இயக்குனர், இந்த தயாரிப்பாளர் என்ற முன்முடிவுகள் இல்லாமல் படமாக பாருங்கள் . பிறகு பேசுங்கள். ஏன் இப்ப இதனை சொல்ல வேண்டிய அவசியமெனில், வடக்கே கோடிகளை கொட்டுகிறார்கள். இந்த மாதிரி எடுங்கள் என. இங்கேயும் அப்படி முயற்சி செய்தார்கள் ஆனால் படம் எடுபடவில்லை. அப்படி அவர்களிடம் சிக்கிவிட்டால் சநாதன நீதிகளை படமாக எடுப்பார்கள். அது வரும் தலைமுறைகளை மீண்டும் அடிமையாக்கும். ஒரு புத்தகம் கொண்டு சேர்க்கும் விடயங்களை விட ஒரு திரைப்படம் கொண்டு சேர்க்கும் வேகமும் விடயமும் முக்கியம். படம் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். அதைவிட முக்கியம் அதுகுறித்து உரையாட கற்றுக்கொள்ளுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக